Tuesday, July 23, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது? - 6


சடங்கில் தொடங்கிய கல்வி... 


எங்கள் பிள்ளைப் பிராயத்தில் Pre.KG, UKG, LKG எல்லாம் கிடையாது. ஐந்து  வயது நிறைந்தால்தான் பள்ளிக்கூட வாசலுக்குள் நுழைய முடியும்ஒண்ணாங்கிளாஸ் தொடங்கி அஞ்சாங்கிளாஸ் வரை ஆரம்பப் பாடசாலை. ஆறாம் கிளாஸ் முதல் பத்தாங்கிளாஸ், பெரிய   பத்தாங்கிளாஸ்( SSLC ) இது ஐஸ்கூல், PUC அதற்குப் பிறகு டிகிரி. இப்படித்தான் இருந்தது.

தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் ஒண்ணாங்கிளாஸ் சேரும்போது அது ஒரு குட்டி வைபவமாக இருக்கும். மாணவனுக்கு புது சட்டை, டவுசர் அணிவித்து, சின்னப் பூமாலை கழுத்தில் அணிவித்து, ஒரு தட்டில் வாழைப்பழம், வெற்றிலை, தரத்துக்குத் தகுந்த மாதிரி குருதட்சிணை பணம், வாத்தியாருக்கு ஒரு வேட்டித் துண்டு இவைகளை எல்லாம் வைத்து பெற்றோர், நெருக்கமான சொந்தக்காரர்கள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்து சேர்ப்பார்கள். அன்று அநேகமாக சரஸ்வதி பூஜைத் தினமாக இருக்கும்.

எங்கள் வாவா நகர கிராமத்திலும் இப்படித்தான் நடக்கும்.

எங்கள் வாவா நகர கிராமம் மலையடிவார கிராமம்.  

பெரிய செங்குளம் ஏரியை ஒட்டிய அழகான ஒரு சின்ன கிராமம். எல்லாப் பக்கமும் பசுமையாகவே இருக்கும். ஊருக்குள்ளேயே இரவுகளில் தவளைகளின் ஒலி கேட்டுக்கொண்டே  இருக்கும்.

நீரோடைகளில், கால்வாய்களில் தண்ணீர்ப் பாம்பு நெளிந்து, நெளிந்து சர்வ சாதாரணமாக ஓடும். விஷப் பாம்புகளுக்கும் குறை இருக்காது. இவை எல்லாம் இன்றல்ல அன்றைய எங்கள் கிராமத்தில்.

சின்ன, ரொம்பச் சின்ன ஒரு பள்ளிவாசல் உண்டு. அதற்கு எதிரில் இடது புறத்தில் இருக்கும் ஒரே பங்களா எங்கள்  கொட்டாரம். அதே பக்கவாட்டில் அடுத்தடுத்து வலது புறமும் இடது புறமும் தெருக்கள் போகும். அவைகள் எங்கள் ஊர்வாசிகளின் குடியிருப்புகள்.

பள்ளிவாசலுக்குப் பின் புறம் பச்சை பசேல் என்ற வயல்வெளி. பள்ளிவாசல் ஒட்டிப் பின்னால் ஒரு நல்ல ஊருணி. ஊருணிக்கு முன்னால் ஊர் பொதுக் கிணறு, பெரிய கிணறு. எல்லா வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அங்கு தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள்.

கிணத்துக்கு வலது புறம் மையத்தாங்குழி (அடக்கஸ்தலம்). அதற்கு அடுத்து வலது புறம் ஓங்கி வளர்ந்த தென்னம் தோப்புகள்.               

பள்ளிவாசல் படிக்கட்டில் நின்று பார்த்தால் எதிரே தெரு, வலப் புறத்தில் முதலில் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை. பள்ளிவாசல் வாசலில் இருந்து இடப் பக்கம் பள்ளி வாசலை ஒட்டி, பள்ளி வாசலுக்கு உரிய கிணறு. பள்ளிவாசலில் ஒழுச் செய்ய இங்கிருந்து தான் தண்ணீர் இரைப்பார்கள்.  முஸ்லிம் பெண்கள் இங்கே குடங்களைக் கொண்டுவந்து  தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள்.

அதை ஒட்டி ஒரு குட்டித் தென்னம் தோப்பு. தென்னந்தோப்பை ஒட்டி ஒரு சின்ன பிள்ளையார் கோயில். பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் ஒரு பெரிய கிணறு. இந்தக் கிணற்றில் தான் ஆசாரிமார், நாயக்கர்மார், மறக்குடி பெண்கள் குடி நீர் இறைத்துக் கொள்வார்கள். அந்தக் கிணறை ஒட்டி இந்து ஆரம்பப் பாடசாலை. அதை ஒட்டி ஊர்ப் பொது மாட்டு மந்தை. இது தான் எங்கள் வாவா நகரம்.

நான் இங்கு வேறு செய்தி சொல்ல வந்தேன். எங்கள் ஊர்ப் பெயரைக் குறிப்பிட்ட உடனே, இந்தக் காட்சி என் மனதுக்குள்ளே வந்து அமர்ந்து விட்டது. இன்று வாவா நகரம் இப்படி இல்லை என்று சொல்கிறார்கள். நான் சொந்த ஊருக்குப் போய் 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவ்வளவு தூரம் எங்கள் ஊரைச் சொன்னதற்குப் பொறுத்துக்  கொள்ளுங்கள். இது தான் ஊர்ப் பித்து என்பது.

இப்பொழுது நான் பள்ளிக்கூட கதைக்கு வருகிறேன். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோருமே இந்து ஆரம்பப் பாடசாலையில் தான் சேர்க்கப் பட்டோம். அந்த சின்ன கிராமத்துக்குள் 2 ஆரம்பப் பாடசாலைகள் அந்தக் காலத்திலேயே. பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொழுது நடைபெறும் சடங்குகள் என் 3 அண்ணன்மார்களுக்கும் நடக்க வில்லை.

என்னை சேர்க்கும் பொழுது, என்னை விட வயது குறைந்த எங்கள் மாமி மகன் அப்துல்லாவையும் சேர்த்து ஒன்றாக இந்து ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள்.

எங்கள் இரண்டு பேருக்கும் இந்த சடங்குகள் எல்லாம் நடந்தன. இது ஏன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிபின் மூத்த மகன் தான் என் மாமி மகன் அப்துல்லாஹ்.

இந்த சடங்கோடு சேர்க்கப் பட்டோம், ஆனால் ஒரு ஆண்டு கூட அங்கு படிக்கவில்லை.

அப்துல்லாஹ் குடும்பம் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டது. நான், என் தாயார், என் தந்தையார், எனக்கு நேர் மூத்த என் அண்ணன் பிலால் சென்னையில் குடியேறி விட்டோம். என் மூத்த அண்ணன் ஜலாலும், அடுத்த அண்ணன் பாருக்கும் எங்கள் மாமியோடு திருநெல்வேலிக்குப் போய் விட்டார்கள். சென்னைக்கு வந்த நாங்கள் மண்ணடி செம்புதாஸ் தெருவில் குடியமர்ந்தோம்.

என்னைப் பள்ளியில் சேர்க்கவில்லை. மீண்டும் மறு ஆண்டு அதே ஒண்ணாம் வகுப்பு தம்புச் செட்டி தெருவில் உள்ள துவக்கப் பாடசாலையில் சேர்க்கப் பட்டேன்.

இங்கேயும் முழு ஆண்டை முடிக்கவில்லை. மீண்டும் எங்கள் குடும்பம் தென்காசிக்கு குடி வந்தது. தென்காசியில் ஒரு மவுண்ட் ரோடு இருக்கிறது.

அந்த மவுண்ட் ரோட்டில் உள்ள காட்டு பாவா ஆரம்பப் பாடசாலையில்  மீண்டும் ஒண்ணாம் வகுப்பு சேர்க்கப் பட்டேன்.
              
5ஆம் கிளாஸ் வரை அங்கேதான் படிப்பு தொடர்ந்தது. 6வது வகுப்பு தென்காசி I.C. ஈஸ்வரன் பிள்ளை பள்ளிக்கு மாறியது. ஆனால் பாதியாண்டிலேயே எங்கள் குடும்பம் சென்னையை நோக்கிப் பயணப் பட்டது. சென்னை சைதாப் பேட்டையில் குடியேறினோம். அந்த ஆண்டுப் படிப்பு அவ்வளவுதான்.

மறு ஆண்டு மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் உள்ள முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் அதே பழைய 6ஆம் வகுப்பு சேர்க்கப் பட்டேன்.

ஒரு ரகசியம். ஆனால் சத்தியமான உண்மை. தமிழையே கூட்டிப் படிக்க எனக்குத் தெரியாது. தென்காசியில் எங்கள் management லேயே படித்ததினால் ஆண்டுதோறும் பாஸ் ஆகிவிட்டேன்.

எங்கள் தந்தையாருக்கு இந்த ரகசியம் தெரியாது. எங்கள் தந்தையார் அரசியல் காரணங்களால் எப்போதும் வெளியிலேயே இருப்பதனால் குடும்பத்தைப் பற்றி அவருக்கு அக்கறை இருப்பதில்லை.
   
எனக்கு நேர் மூத்த அண்ணன் பிலால், எனக்குத் தமிழ் தெரியாத ரகசியத்தை என் தந்தையாரிடம் கூறிவிட்டான். நான் தமிழ் தெரியாது என்று சொல்வதால் ஆங்கிலம் எல்லாம் தெரியும் என்று அர்த்தமல்ல. அதாவது எதுவும் எனக்குத் தெரியாது.

மறுநாளில் இருந்து காலையில் தினத்தந்தி பேப்பரில் தலைப்பை மட்டும் நான் என் தந்தையாரிடம் படித்துக் காட்ட வேண்டும். எழுத்தைக் கூட்டிக் கூட்டிப் படிப்பதில் எப்படியும் ஒரு தலைப்புக்கு  இரண்டு தப்புப் போடுவேன். ஒவ்வொரு தப்புக்கும் ஒரு கொட்டு விழும். என் தந்தையார் அடி எப்பொழுதும் சாதாரணமாக இருக்காது.

தலை முடியை பிடித்துக் கொண்டு சுவற்றில் சென்று முட்டுவார். என்ன இடித்து என்ன?..  கொட்டினால் என்ன?..  எனக்கு படிப்பு வரவில்லை. தந்தையார் பொறுமை இழந்து விட்டார். அடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனாலும் முத்தியால் பேட்டையில் 6ஆம் வகுப்புத் தொடர்ந்தது.

காயல் பட்டிணம் வள்ளல் B.A. காக்கா, எங்கள் இல்லத்துக்கு வாரம் இரண்டு முறை வருவார்கள். என் நிலைமை புரிந்து எனக்கும், அண்ணனுக்கும் அவர்களுக்கு வேண்டிய ஒரு வாத்தியாரை டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

நானும் என் அண்ணன்மார்களும் மண்ணடி முத்தியால் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் படிக்கிறோம். எங்களுடைய டியூஷன் வாத்தியார், மண்ணடி அங்கப்பன் நாயக்கர் தெரு அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 2nd  கிரேடு வாத்தியார். அவரும் சைதாப் பேட்டையில் தான் குடி இருந்தார். அவர் ரொம்ப நேர்மையான, கண்ணியமான உயர்ந்த மனிதர். அவர் பெயர் குருசாமி.

தினம் மாலை 6 மணிக்கு சைதாப் பேட்டை எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார். டியூஷன் ஆரம்பம் ஆகி விடும்.

பாடம் நடக்கிறதோ இல்லையோ, என்னை விளாசித் தள்ளி விடுவார். எங்க வாப்பா அடித்து ஏறாதக் கல்வி இவர் அடித்தா வந்து விடும்?..
இந்த அடி வாங்கும் நிகழ்ச்சி  அண்ணன் பிலாலுக்கு ஒரு ஆனந்த விளையாட்டாகி விட்டது.

தினம், தினம் எப்படியாவது அவரிடம் என்னை மாட்டி விடுவான். அதனால் அவன் நல்ல மாணவன். நான் படு மோசமான மாணவனாகி விட்டேன். இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது.

ஒரு நாள் எங்கள் குருசாமி வாத்தியார், எங்கள் தந்தையாரிடம் கூறி விட்டார், "ஐயா ஹிலாலுக்காக நான் வாங்கும் பீஸ் என் உடலில் ஒட்டாது. அவனுக்குப் படிப்பு வராது. அவனை மண்ணடி இரும்புக் கடையில் வேலையில் விடுங்கள். பின்னால் நல்லா சம்பாதித்து விடுவான். நீங்கள் தப்பா நினைக்காதீர்கள். இவனுக்கு அது தான் சரி.

பெரியவன் பிலாலுக்குப் பாடம் சொல்லித் தருகிறேன். இவன் வேண்டுமானால் சும்மா உட்கார்ந்து இருக்கட்டும்" என்று கூறி விட்டார். என் டியூஷன் கதை முடிந்து விட்டது.

எக்ஸாம் நெருங்கி விட்டது. நான், என் கூடப் படித்த மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டேன்.

கல்கத்தா போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்ட்ரல் ரயில்  நிலையத்துக்குச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு ரயிலில் ஏறி சென்று விட்டோம். அரக்கோணத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொண்டார். பள்ளிக் கூட புத்தகப் பையோடு நாங்கள் இருந்ததால் எங்களை மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.

     
என்னுடன் வந்ததில் ஒருவன் தியாகராஜன், மண்ணடி அரண்மனைக்காரன் தெருவின் முனையில் உள்ள முடித்திருத்தக உரிமையாளரின் மகன். இப்போது வள்ளுவர் கோட்டத்திற்கு அருகாமையில் பெரிய சலூன் கடை வைத்திருக்கிறான்.

அடுத்தவன் கனகராஜ், ஏழு கிணறு மாநகராட்சி உறுப்பினர் குப்பு சாமி மனைவியின் தம்பி இப்போது அந்தப் பகுதியில் சொந்த ஆட்டோ  ஓட்டிக் கொண்டு இருக்கிறான்.

அடுத்தவன் காஜாமுஹைதீன், மரைக்கார் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் காயல் பட்டினம் பாசுல் அஸ்ஹப் ஹாஜியார் மகன். தற்போது பெரு வணிகன்.
சென்னை திரும்பினோம்  நாங்கள். ஆனால் நான் மட்டும் வீட்டுக்குப் போகாமல் மீண்டும் கள்ள ரயில் ஏறி திருநெல்வேலிக்கு போய் விட்டேன்.

நெல்லையில் எங்கள் தாதா விடம் போய் சேர்ந்து விட்டேன்தேர்வு எழுத வில்லை. ரிசல்ட் வருகிறது நான் பாஸ் ஆகிவிட்டேன். எப்படியாவது நான் மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான இளையான்குடி P.N.I. அபு தாலிப் அவர்களும், M.A. அக்பர் சாஹிப் அவர்களும் என்னமோ செய்து என்னை பாஸ் பண்ண வைத்து விட்டார்கள்.

நெல்லையில் இருந்து சென்னைக்கு அனுப்பப் பட்டேன். மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு. மீண்டும் முத்தியால் பேட்டையில் ஏழாவது வகுப்பில் சேர்க்கப் பட்டேன். இப்பொழுதும் எனக்கு ஒன்றும் தெரியாது.

3 - 4 மாதங்கள் ஓடின. எங்கள் வகுப்பு ஆசிரியர் மாம்பலத்தில் இருந்து மண்ணடிக்கு வருவார். நான் சைதாப் பேட்டையில் இருந்து மண்ணடிக்கு வருவேன். என் வகுப்பாசிரியர் பெயர் ராமாராவ். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால் எங்கள் பள்ளிக் கூடத்தில் அவர் பெயர் துண்டு. இது காரணப் பெயர். எப்பொழுதுமே துண்டைக் கழுத்தில் அணிந்து இருப்பார்.

வகுப்பறையில் எப்பொழுதுமே ரோட்டில் இருக்கும் மாங்காயை ஆசிரியருக்குத் தெரியாமல் தின்று கொண்டு இருப்போம். மாங்கொட்டையை டெஸ்குக்குக் கீழ் வைத்து இருப்போம். ஆசிரியர் ராமாராவ் போடில் எழுதிக் கொண்டு இருந்தார். விளையாட்டுத் தனமாக மாங்கொட்டையை அவர் முதுகில் தூக்கி எரிந்து விட்டேன். வகுப்பில் இருந்த நல்ல பையன்கள் காட்டிக் கொடுத்து விட்டார்கள். முத்தியால் பேட்டைக் கல்வி அன்றோடு சமாதிக்குப் போய் விட்டது.


எங்கள் அண்ணன் தம்பிகளில் மாலை போட்டு சடங்கோடு பள்ளியில் சேர்க்கப் பட்டவன் நான் ஒருவன் தான். இந்த சடங்கு முத்தியால் பேட்டையில் சமாதி ஆகி விட்டது!...

No comments:

Post a Comment